இன்னிக்கும் லேட்டான்னு மேனேஜர் வறுத்தெடுத்துட்டாருப்பா’ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே வந்தாள் பக்கத்து சீட் தோழி.
'என்னாச்சு' என்று நான் கேட்பதற்காகவே காத்திருந்தவள் போல தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள்.
`இந்த முடியோட தினமும் ரோதனைதாம்பா. இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறயா, தலைக்கு குளிச்சு கிளம்பறதுக்குள்ள லேட்டாயிடுச்சு. நீளமான முடின்னு பெருமைப்பட்ட காலம் போய், தினமும் எண்ணெய் தடவி, சிக்கெடுத்து சீவுறதுக்குள்ள தாவு தீர்ந்துருது...
போதாக்குறைக்கு, அமாவாசை, பிரதோஷம், நோம்பு, நாளு கிழமைன்னா தலைக்கு குளிச்சிட்டுதான் பூஜை செய்யணும்னு மாமியாரோட கண்டிஷன் வேற...
தலைக்குக் குளிச்சப்புறம் முடி சரியா காயலைன்னா, சைனஸ் தலைவலி வந்து பாடாப் படுத்திரும். கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டா ஈறு, பேனு வந்து தலையை அரிக்குது...
காலை நேரத்துல சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்புறது, எல்லாருக்கும் லஞ்ச் பேக் பண்றது, நான் கிளம்பறதுன்னு ஆயிரம் வேலை...
முடியை வெட்டிக்கிறேன், ஷார்ட் ஹேர்னா மெயின்டெயின் பண்றது ஈஸி, டக்னு ஒரு கிளிப்பை மாட்டிட்டு கிளம்பிறலாம்னு சொன்னா மாமியார் ஒப்புக்க மாட்டேங்குறாங்க. முடி தாண்டி உனக்கு அழகேன்னு வீட்டுக்காரர் ஒருபக்கம் அவங்களுக்கு ஒத்து ஊதறார். என்னோட கஷ்டம் யாருக்குப் புரியுது?’ என்று நீளமாக புலம்பி முடித்தவளின் கண்கள் நிரம்பியிருந்தன.
பெண்ணென்றால் அடர்த்தியான, நீளமான கருங்கூந்தலுடன் இருப்பதுதான் அழகு என்ற எண்ணம் நமது சமூகத்தில் இருக்கிறது. நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை `நல்ல அழகான பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும், ஆண்களின் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது.
குட்டைமுடிப் பெண்ணை `போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். ஆனால், அந்த முடியால் பெண்கள் படும் பாடு என்னவென்று சொல்லி மாளாது.
நீளமான முடியைப் பராமரிப்பதற்கு எண்ணெய், ஷாம்பூ, கிளிப்புகள், ஹேர் பேண்டுகள் என்று ஏகப்பட்ட செலவாகும். அதோடு முடியைப் பராமரிப்பதற்கு ஆகும் நேரத்தையும், ஆற்றலையும் கணக்கிட்டுப் பார்த்தால், ஒன்றுமில்லாத ஒரு முடிக்காக எதற்காக இவ்வளவு பணத்தையும், நேரத்தையும் கொட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.
பெண்ணின் முடி குறையக் குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக இந்த ஆணாதிக்க சமுதாயம் பதற்றமடைகிறது. அதனால் முடியைக் குறைக்க பெண்ணின் கணவர்கால் லேசில் அனுமதிப்பதில்லை.
சராசரி குடும்பத்தில், ஒரு பெண் எளிதாக முடியை வெட்டிவிட முடியாது. அவளுடைய முடி தான். ஆனால் அதை எப்படி வைத்து கொள்வது, வெட்டுவது என்பதற்க்கு கூட குடும்பத்தின் அனுமதி தேவை. அனுமதி பெறாமல் வெட்டிக் கொண்டாலோ `முடி எவ்வளவு அழகா இருந்தது! எதுக்கு வெட்டினே?’ என்று குடும்பத்தாரும், கண்வனும் திட்டுவதும், தோழிகள் உரிமையுடன் கோபித்துக்கொள்வதும், சர்வசாதாரண மாக நடக்கும்.
சுற்றியிருப்போரின் எதிர்ப்பை மீறித் தான் பெண்கள் தங்கள் முடியின் நீளத்தைக் குறைக்க வேண்டி இருக்கிறது. தன் உரிமைக்கும், விருப்பு வெறுப்பிக்கும் முன்னுரிமை கொடுக்கும், சுதந்திர உணர்வு கொண்ட பெண்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. பெரும்பான்மை பெண்களுக்கு சாத்தியப்படுவதில்லை என்பது தான் இந்த சமூகத்தில் நடக்கிறது.
கல்யாணமாகாத பெண்ணென்றால் கேட்கவே வேண்டாம், முடியை வெட்ட பெரும்பாலான அம்மாக்களே அனுமதிக்க மாட் டார்கள். `கல்யாணம் வரைக்கும் வெட்டக் கூடாது’ என்று கறாராகச் சொல்லிவிடுவார்கள். சில அம்மாக்கள் தாங்களே தங்கள் பெண்ணுக்கு முடியை ட்ரிம் மட்டும் செய்து விடுவார்கள். குடும்பப் பெண் இமேஜை, இந்த ஆணாதிக்க சமூகம், முடியில் ஏற்றி வைத்திருப்பதால், கல்யாணச் சந்தையில் முடியுள்ள பெண்ணுக்கு தான் முன்னுரிமை.
ஏற்கெனவே சொன்னதுபோல, கல்யாணமான பெரும்பான்மை பெண்களுக்கும் தன் முடியின் மீது பெரிதாக உரிமை இல்லை.
என்னுடைய பக்கத்து அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு தோழிக்கு `பாய்கட்’ வெட்ட வேண்டுமென்று அவ்வளவு ஆசை. கணவரும், மாமியாரும் `நோ’ சொல்லிவிட்டதால் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். லீவில் இருந்ததால் சில மாதங்கள் அவரைப் பார்க்க முடியவில்லை. திரும்பப் பார்த்தபோது `பாய்கட்’டில் ஸ்மார்ட்டாக இருந்தாள்.
`ஹேய், சூப்பராக இருக்குப்பா! எப்படி வீட்டுல சமாளிச்சே’ என்று வியப்புடன் கேட்டேன். என்னை தனியாக அழைத்துச் சென்று முடி வெட்டிய கதையைக் கூறினாள். அவரது இரண்டாவது பிரசவத்தின் போது கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டதாம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்து ஆண் குழந்தையும் பிறந்தது.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும் தோழி, ஆபரேஷன் நடந்து குழந்தை நல்லபடியாகப் பிறந்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று குலதெய்வத் துக்கு வேண்டியிருப்பதாகச் சொல்ல, எல்லோரும் கோயிலுக்குப் போய் பயபக்தியுடன் அவளுக்கு மொட்டை போட்டார்களாம்.
`அதுக்கப்புறம் முடிவளர அஞ்சாறு மாசம் ஆச்சு. வீட்டுல எல்லாருக்கும் என்னோட குட்டை முடியே பழகிட்டதால, பார்லர் போய் ட்ரிம் பண்ணிட்டு இப்படியே மெயின் டெயின் பண்றேன்’ என்று கண்ணடித்தாள். அந்தப் பெண் தனது முடியை தன் விருப்பத்துக்கு வெட்டிக் கொள்வதற்குகூட எவ்வளவு திட்டமிட வேண்டியிருக்கிறது, என்னவெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது என்று அயர்ந்து போனேன்.
முடியை விருப்பப்படி வெட்ட உரிமை இருப்பவர்களில் ஒரு தரப்பினரும், சுற்றியிருப்பவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து, தங்கள் விருப்பப்படி தங்கள் முடியை வெட்டிக் கொள்வதில்லை. பெண் முடியைக் குறைக்கவே இவ்வளவு பஞ்சாயத்து என்றால் இயல்பாக மொட்டை அடித்துக் கொள்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இங்கு ஆணின் மொட்டை சாதாரணமான செயல், பெண் மொட்டையடிப்பதோ கேவலமானதாகப் பார்க்கப்படுகிறது. (சாமிக்கு வேண்டுதல், கோயிலுக்கு நேர்ந்து கொள்வது என்றால் மட்டும் விதிவிலக்கு.)
எல்லா பெண்களுக்கும், அவர்களின் முடி அடர்த்தியாகவோ, நீளமாகவோ முடி இருப்பது இல்லை. அப்படி முடி நீளமாக இல்லாதவர்கள், முடி நீளமாக வளரவும், முடி உதிர்வதைத் தடுப்பதற்காகவும், `அந்த ஹேர் ஆயில்’, `இந்த ஷாம்பூ’ என்று படாதபாடு படுகிறார்கள்.
சிலருக்கு உடல்நலக் குறைபாட்டாலும், புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு கீமோதெரபி, ரேடியேஷனாலும் முடிகொட்டிப்போய் மொட்டையாகி விடும். இவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், `விக்’ தயாரிக்க `முடிதானம்’ செய்து உதவு கிறார்கள் சில பெண்கள். நல்ல விஷயம்தான்.
ஆனால், இதற்கான நிரந்தரத் தீர்வு, முடியில்லாத பெண்களையும் இயல்பாக ஏற்பதாகத்தானே இருக்க வேண்டும். ஒரு பெண் தன் விருப்பப்படி மொட்டையடித்துக் கொண்டால், அதை இயல்பான விஷயமாக பார்த்துப் பழகினால், முடியிழந்தவர்களுக்கு `விக்’ தயாரிக்க வேண்டிய அவசியமே இருக்காதே...
இதை கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள். புற்று நோய் சிகிச்சையால் முடியிழந்த ஆண்கள் யாரும் `விக்'கை தேடிப் போவதாகத் தெரியவில்லை. மொட்டைத் தலை அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்குவதில்லை. இதற்குக் காரணம் ஆண்கள் மொட்டையடிப்பது இங்கே சாதாரண விஷயம். சமுதாயம் அதை வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், பெண்களின் மொட்டை அப்படி ஏற்கப்படுவதில்லை. நீள முடிதான் அழகு என்ற கற்பிதத்தால், முடி கொட்டி மொட்டையானால், அதனால் வாழ்க்கையே போய்விட்டதாக பெண்கள் சோர்வடைகிறார்கள். இதை ஈடுகட்ட `விக்’ அணிந்து, அதன் விளைவாக சிலருக்கு ஒவ்வாமை, சரும பாதிப்புகள் வந்து அவதிப்படுகின்றனர்.
பெண் என்பவள் முடியோடு தான் இருக்க வேண்டும் என்பதில்லை, முடியில்லாமலும் இருக்கலாம் - அது சூழலினாலோ, அவள் தேர்வினாலோ கூட இருக்கலாம். முடியில்லாமலும் சந்தோஷமாக வாழலாம். அப்படியும் பெண்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நீளமான முடிதான் அழகு என்ற கற்பிதத்தைத் தூக்கி தூரப்போடுங்கள். பெண், முடி வளர்ப்பதும், வெட்டிக் கொள்வதும், மொட்டை அடித்துக் கொள்வதும் அவளது தேர்வு. அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்வதற்கான உரிமையை அவர்களுக்கு கொடுப்போம்.
அவள் முடி பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல்... அவள் முடியை வைத்து அவளை மதிப்பிடாமல் இருக்கப் பழகுவோம்!
அருமையான பதிவு நண்பா
ReplyDeleteNice article
ReplyDelete