Friday 20 August 2021

தேவசேனா - இரண்டாம் பாகம்

தேவசேனா ஒவ்வொரு வீடாகச் சென்று தான் செய்த உணவை எடுத்துக் கொள்ள கேட்க யாரும் அவளைச் சீண்ட கூட இல்லை. பசியில் துடித்த குழந்தைகளைக் கூடப் பசியாற விடவில்லை அந்த குழந்தைகளின் பெற்றோர். செய்வதறியாது துடித்தாள் தேவசேனா. அப்போது ஒரு சிறுமி வந்து தேவசேனாவிடம் கேட்டாள்.


அக்கா, நீங்கக் கெட்டவங்களா? அதான் நீ கொடுக்கிற கஞ்சியை வாங்க கூடாதுன்னு சொல்றாங்களா?

நான் கெட்டவள் இல்லையம்மா? ஆனால் பிறந்த இடம் என்னைக் கெட்டவள் ஆக்கிவிட்டது? எல்லாம் என் தலைவிதி?

அந்த பெண் தேவசேனா பேசுவது புரியாமல் விழிக்க, 

உன்னைப் போல நானும், மனதளவிலும், உடலளவிலும் ஒரு குழந்தை தானம்மா? இது உன் அப்பாவுக்குக் கூட தெரிந்து இருக்கலாம்?


அப்போது அந்த சிறுமியின் அம்மா வந்து அவளை அடித்து இழுத்துச் செல்ல, தேவசேனா தன்னுடன் பேசிய சிறுமியை அடிப்பதைக் கண்டு கோபமுற்றாள். அந்த தாயிடமிருந்து சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வேகமாக ஊரின் நடுவில் இருந்த அம்மன் கோவிலுக்கு வந்தாள். சிறுமியின் அம்மா தேவசேனாவை திட்டிக் கொண்டே அவள் பின்னால் வர ஏதோ பிரச்சனை என்று கூட்டம் கூடியது. 

கோவில் மைதானத்தில் தேவசேனா வந்து நிற்கிறாள் என்ற செய்தி தெரிந்ததும் அவளின் அழகை பார்க்கவே எல்லோரும் கோவில் மைதானத்தில் கூடினர்.

2020 அனுஷ்கா தன்னுடைய இன்பார்மரை ரெகுலராகப் பாலோ பண்ணிக் கொண்டு இருந்தாள். அவனுக்கு வேண்டியது எல்லாமே பணமாக, பொருளாக, அள்ளி அள்ளிக் கொடுத்தாள். அவனும் அமைச்சர் சவுந்திர பாண்டியனை தொடர்ந்து பாலோ செய்தான்.

அவரின் இல்லீகல் வேலைகள், பினாமி பெயரில் வாங்கும் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் எங்குப் பதுக்கி வைத்து இருக்கிறார் என்று இரு வாரங்களுக்குப் பின்பு தான் தெரிந்தது. 

அன்று இரவு அனுஷ்கா ஒரு பார்ட்டியில் இருந்தாள். மேல் தட்டு வர்க்கத்தினரின் பார்ட்டி என்பதால் அனுஷ்கா தன் ரிப்போர்ட்டர் அவதாரத்தை விடுத்து, கொஞ்சம் கிளாமராக ஒரு ஸ்லீவ்லெஸ் ட்ரஸ் வெள்ளை நிறத்தில் அணிந்து அந்த பார்ட்டிக்கு போய் இருந்தாள். அப்போது தான் இன்பார்மர் போன் செய்து அமைச்சர் சவுந்திர பாண்டியன் தன் பினாமி சொத்து பத்திரங்களைத் தன்னுடைய ஒரு கம்பெனியில் லாக்கரில் பத்திரமாக வைத்து இருப்பதாகச் சொன்னான். 


ஆனால் அங்குச் செக்யூரிட்டி அதிகம் என்றும் தன்னால் அங்குப் போக முடியாது, அதனால் அனுஷ்காவே ரிஸ்க் எடுத்துத் தனக்கு தேவையான ஆதாரங்களை எடுத்துக் கொள்ள சொன்னான். அனுஷ்காவும் உடனே இன்பார்மர் சொன்ன இடத்துக்குக் கிளம்பினாள்.

தோளில் ஒரு சின்னப் பேக்குடன், தன் அடையாளத்தை மறைக்க ஒரு வெள்ளைத் தொப்பியுடன் புறப்பட்டாள். இன்பார்மர் சொன்ன இடத்தில் அவன் காத்திருக்க, அவன் சொன்ன வழியில் பதுங்கிப் பதுங்கி முன்னேறி, அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த அமைச்சர் சவுந்திர பாண்டியனின் பர்சனல் ரூமை அடைந்தாள். அந்த ரூம் ஒரு எலக்ட்ரானிக் லாக்கரால் மூடப்பட்டு இருக்க, தான் கொண்டு வந்து இருந்த ஒரு டிவைஸை வைத்து லாக்கர் பாஸ்வேர்ட் கண்டு பிடித்து, சேப்பாக உள்ளே நுழைந்தாள் அனுஷ்கா.

அடுத்த சில நிமிடங்களில் தனக்கு தேவையான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேட, அவளுக்குத் தேவையானதை விட இன்னும் சில டாக்குமென்ட்கள் கிடைக்க, அதை எல்லாம் தன்னுடைய செல்போனில் ஸ்கேன் செய்து தன்னுடைய பர்சனல் மெயிலுக்கு அனுப்பிவிட்டாள்.

அதன்பின் அனுஷ்கா கிளம்பி வெளியே வரும்போது, இருட்டில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்தாள். அப்போது அவளது வெற்று தோள்பட்டையில் ஒரு கை அழுத்தமாகப் பதிந்து அவளை இருக்கமாகப் பிடித்துக் கொண்டது. அனுஷ்கா பதட்டமாகத் திரும்பிப் பார்க்க, அவள் பின்னால் 6.5 அடி உயரத்தில் ஒரு நீக்ரோ செக்யூரிட்டி உடையுடன் நின்று கொண்டு இருந்தான்.



அவன் சுதாரிக்கும் முன் அவன்மேல் தாக்குதல் நடத்த, ஒரு சிறு போராட்டத்திற்க்கு பின் அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தாள். ஆனால் இன்னொரு இடத்தில் அவனைப் போலவே இன்னொரு நீக்ரோ செக்யூரிட்டி அவளைத் தடுக்க, இப்போது இரு நீக்ரோக்களும் சேர்ந்து அனுஷ்காவை வளைத்துப் பிடித்தார்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் அனுஷ்கா இரு நீக்ரோ செக்யூரிட்டிகளிடம் மாட்டிக் கொண்டாள். (நீங்க வேற சீன் எதிர்பார்க்காதீங்க) செக்யூரிட்டிஸ் அமைச்சருக்குத் தகவல் கொடுக்க, அமைச்சர் அந்த அகால வேளையிலும் கம்பெனிக்குத் தன் அடியாட்களுடன் வந்தார்.

அனுஷ்காவை ஒரு மர நாற்காலியில் கட்டி போட்டு இருந்தார்கள். அமைச்சர் சவுந்திர பாண்டியன் அவள் முன் வந்து நின்றான்.

ஏண்டா, எரும மாடுகளா... உங்களை மீறி ஒரு பொண்ணு உள்ள வந்து இருக்கா? நீ என்ன காவல் காக்குற?

சார், நாங்க அவ எதுவும் பண்றதுக்கு முன்னாடியே பர்ஸ்ட் புளோரிலேயெ பிடிச்சிட்டோம்... என்று அமைச்சருக்குப் பயந்து பொய் சொன்னான் செக்யூரிட்டி. அவன் சொன்னதைக் கேட்டதும் அனுஷ்கா அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

இவளைக் கொன்னு கடலில் தூக்கி போடுங்கடா? என்று அமைச்சர் கத்த, அவரது பிஏ அமைச்சரைத் தடுத்தான்.

சார், அதெல்லாம் வேண்டாம், இவ  உங்க ஊழலைப் பத்திதான் பத்திரிக்கைல எழுதிட்டு இருக்கா? அவளுக்கு எது நடந்தாலும், அதுக்கு காரணம்னு நம்ம மேல தான் டவுட் வரும்...

அதுக்கு இவளை இப்படியே விடச் சொல்றியா?

இல்ல, கொஞ்ச நாள் கட்டி போட்டு வைக்கலாம்...

அது பத்தாதுடா... என் நிம்மதியையே இவ கெடுத்துட்டா... என் அரசியல் வாழ்க்கைல இத்தனை நாள் காப்பாத்தி வச்சு இருந்த மரியாதையையும் கெடுத்துட்டா... இவளை இப்படியே விடக் கூடாது?


பண்ணலாம்ங்க ஐயா? ஆனா இப்ப வேண்டாம்... நிறுத்தி நிதானமா பொறுமையா நம்ம மேல பழி வராத மாதிரி ஏதாவது பண்ணலாம்...இப்ப நாம வீட்டுக்குப் போகலாம்...என்று பிஏ சொல்ல, அமைச்சர் செக்யூரிட்டியை பார்த்து எச்சரித்து விட்டுக் கிளம்பினார்.

மக்கள் முன் நிற்கும் தேவசேனா என்ன செய்யப் போகிறாள்? அமைச்சர் சவுந்திர பாண்டியனிடம் மாட்டிக் கொண்ட அனுஷ்கா எப்படி தப்பிக்க போகிறாள்?
 



1 comment:

  1. நண்பா கதை நல்ல விறுவிறுப்பாக உள்ளது இதன் அடுத்த பகுதி எப்பொழுது வரும்

    ReplyDelete