திருமதி இந்தியா பட்டம் வென்ற கேட்கி ஜானி.
நம் சமுதாயத்தில் மொட்டை தலையில் இருப்பவர்களை வித்தியாசம் பாராமல் கிண்டல் செய்வது என்பது எல்லோருக்கும் வழக்கம். அதுவும் ஒரு பெண் என்றால் அவளை மொட்டை, மொட்டச்சி என்று கேலி செய்யும் உறவினர்கள் , நண்பர்கள் என பலர் இருக்கிறார்கள்.
சில உடல், ஹார்மோன் பிரச்சனைகளால் தங்களின் தலை முடியை இழக்கும் ஆண்கள் அல்லது பெண்கள் அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க பெரிய போராட்டமே செய்ய வேண்டி இருக்கிறது. தன்னுடைய வழுக்கை தலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதற்காக நேரம், பணத்தை, தங்கள் மகிழ்ச்சியை இழப்பவர்கள் நிறைய பேர். அதில் சில பேர் மட்டுமே தங்களை வழுக்கை தலையுடன் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் கேட்கி ஜானி. திருமதி இந்தியா பட்டம் பெற்ற இவர் ஒரு அலோபீசியா என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டு தன்னுடைய தலை முடியை முழுவதுமாக இழந்தவர்.
கேட்கி ஜானி குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் பிறந்தவர். புனேவில் ஒரு அரசு வேலையில் பணி புரிந்து வருகிறார். இரண்டு குழந்தைகளின் தாய். தன்னுடைய நாற்பதாவது வயதில் அலோபீசியா நோயினால் தன்னுடைய தலை முடி முழுவதும் கொட்டியதும், நாற்பது நாள்களுக்கு மேல் வழுக்கை தலையுடன் இருந்தார். உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என போகும் இடங்களில் எல்லாம் கேலிகளை எதிர்கொண்டார்.
கேட்கி ஜானி மற்ற பெண்களை போல சாதாரணாமாக தான் இருந்தார். ஒரு நாள் அவரின் தலை முடி அவரது தலையணையில் அதிகமாக உதிர்ந்து இருப்பதை கண்டார். கேட்கி ஜானி அதை பார்த்ததும் பயமும், பீதியும் அடைந்தார். பின் அதற்காக மருத்துவரை போய் பார்த்தார். அவராலும் முடியாத நிலையில் தலை முடி முழுவதும் விழுந்த பின் தான் அலோபீசியா நோய்க்கு சிகிச்சை எடுக்க வேண்டியதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அலோபீசியா நோய்க்காக அதிகமான டோஸ் ஸ்டீராயிட் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டியது இருந்தது. இதனால் அதிக மன அழுத்தம் கேட்கி ஜானிக்கு ஏற்பட்டது.
ஒரு நாள் தான் இந்த விஷயத்தை இனிமேல் ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் கேட்கி ஜானி. தான் ஒரு முடியில்லாத மொட்டை தலை உடைய பெண். மற்ற பெண்களை போல அல்ல என்று தானே முதலில் உணர தொடங்கினார். அதை ஏற்றுக் கொள்ள தன் மனதை தயார்படுத்தினார்.அந்த உண்மையை முழு மனதாக ஏற்றுக் கொண்டார்.
ஆனால் கேட்கி ஜானிக்கு மற்றுமொரு பெரிய பிரச்சனை வெளியே இருந்தது. அது இந்த சமூகம் தன்னை கேட்கும் தேவையில்லாத, தனக்கு வேதனை தரும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த ஒரு பிசியோதெரபிஸ்ட் கேட்கி ஜானி இப்போதும் அழகாக இருப்பதாக சொல்ல அதுவே அவருக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அதன் பின் தனக்கு நடந்ததை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்திடும் ஸ்டீராயிட் மருந்துகளை எடுப்பதை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய அழகான முகம், அதை விட பளபளப்பான மொட்டை தலையுடன் வெளியே செல்வது என முடிவு செய்தார். கேட்கி ஜானி தனக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றி கூறும் போது சொன்னது இது ஒரு எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால் எனக்கு வந்திருக்கும் நோய் கேன்சரா அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான நோயா என்று கேட்பார்கள். ஒரு பெண் மொட்டை தலையுடன் வாழ்வதை விட உயிரை விடுவது மேல் என்று என் முன்னாலேயே பேசுவார்கள். நான் கணவனை இழந்த விதவையா? அதனால் தான் மொட்டை அடித்து இருக்கிறேனா என்றெல்லாம் என்னை பார்ப்பவர்கள் கேட்பார்கள். இந்த கேள்விகள் எனக்கு நாளாக நாளாக பழகிவிட்டது. ஒரு புன்சிரிப்புடன் அதை கடந்து செல்ல பழகிக் கொண்டேன்.
என் விதியை நான் ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தென். எனக்கு நீண்ட நாளாக டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை என் மொட்டை தலையில் அழகான ஒரு டிசைனை டாட்டூவாக போட்டுக் கொண்டேன். அது என்னை மாடர்னாக காட்டியது. அந்த சமயத்தில் தான் பேஸ்புக்கில் மிஸஸ் இந்தியா போட்டிக்கான அறிவிப்பை பார்த்த்து அதில் கலந்து கொண்டேன். இறுதி சுற்றில் நடுவர்கள் என் தைரியத்தை பாராட்டினார். மொட்டை தலையுடன் இருப்பது பாரீஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அது ஒரு பேஷன் என்று கூறினார்கள்.
அந்த போட்டியில் மிஸஸ் இன்ஷிபிரேஷன் டைட்டிலை வென்று, மற்ற என்னை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்மாதிரியாக ஆனேன். அந்த பட்டத்திற்கு சரியான வெற்றியாளர் நான் தான் என்று என் மொட்டை தலையில் கிரீடம் வைத்து, நான்தான் வெற்றியாளர் என்று கூறும் போது என் தைரியம், மற்றும் உள்ளார்ந்த அழகிற்காக அதை ஏற்றுக் கொண்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் கேட்கி ஜானி
உங்ககளை நீங்கள் நேசித்தால் போதும். இந்த சமூகம் உங்ககளை எப்படி பார்க்கிறது என்று நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. அதன் மூலம் நீங்கள் இந்த உலகையே வெல்லலாம் என்று கூறுகிறார் கேட்கி ஜானி. கேட்கி ஜானியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தில் மொழியில் அக்கினிஜா என்ற புத்தகம் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அழகு ஆன்மாவில் உள்ளது. உங்கள் தலைமுடியில் இல்லை!!!
No comments:
Post a Comment